Sunday, August 01, 2021

வேண்டிய நண்பனும், வேண்டாத விருந்தாளியும்!

அனைவருக்கும் ஆகஸ்ட் மாத நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நம்ம இங்க சந்திச்சு ரொம்ப நாள் ஆகுது இல்ல?  சொல்லப்போனால் ஒரு வருஷத்துக்கும் மேல இருக்கும். 

என்னப்பா நீப்பாட்டுக்கு பிளாக் ஆரம்பிச்சிட்டு போயிட்ட, அப்படின்னு நெனைக்குறவங்களுக்கும் தொடர்ந்து இந்நாள் வரைக்கும் என்னை எழுது எழுதுன்னு ஊக்குவிச்சிட்டு இருக்குறவங்களுக்கும் முதல்ல என்னோட மனிப்பையும் அப்புறம் உங்க அன்புக்கு நன்றியையும் தெரிவிச்சிக்குறேன்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி என்னுடையக் கடைசிப் பதிவை எழுதிவிட்டு அடுத்தடுத்த பதிவுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த வேளையில், சரியாக ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் எங்கள் வீட்டின் சூழ்நிலை மிகத் தலைகீழாக மாற ஆரம்பித்தது. வேண்டாத விருந்தாளியாகக் கொரோனா எங்கள் இல்லத்தில் பிரவேசித்தது. முதலில் என் தந்தை, பின் என் தங்கை, அடுத்து நான், அடுத்து என் சிறிய தங்கை  என அனைவரையும் அடுத்தடுத்துத் தொட்டுப் பார்த்தது. ஒரு கட்டத்தில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உடல்நல குறைபாட்டிற்கும் பின்னால் மீண்டுவரவும் தொடங்கினோம்.  ஆனால், என் பெரிய தங்கையை கொரோனாவிற்கு  மிகவும் பிடித்தது போல என் தங்கையின்  உடம்பில் ஒரு டென்ட் போட்டுத் தங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சரியாக ஜூலை 2ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட என் தங்கை, ஒன்றவை மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் அதுவும் ஒரு மாதம் ஐசியு என்று சொல்லப்படுகிற தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். சாதாரணமான சுவாசப் பிரச்சனை என்று அதுவரை நினைத்திருந்த எங்களுக்கு கொரோனா, கோவிட் நிமோனியா எனத் தெரியவந்தது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தது என் தங்கையின் சூழ்நிலையில்.

ஜூலை 3ஆம் தேதி  சென்ட்ரல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு என் தங்கைக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டது. இவ்வாறாகக் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாங்கள் கடந்துவந்த பாதை மிக மோசமானதாகவும் வேதனைகள் நிறைந்ததாகவும் அமைந்துவிட்டது.  இடையிடையே வென்டிலேட்டர் நின்று போவதும் என் தங்கை மரணத்தின் விளிம்புவரை தொட்டு வந்ததும் இன்றைக்கு நினைத்தாலும் இதயத்தைப் பிழியக்கூடியதாக இருக்கிறது.  ஒருவழியாக அனைவரின் வேண்டுதல்களும் கடவுளின் மிகப்பெரிய கிருபையாலும்  என் தங்கை அத்தகைய அசாதாரண சூழலிலிருந்து மீண்டுவந்தார். ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் வீட்டிற்குக் கூட்டி வந்தோம். ஓரளவிற்குச் சூழ்நிலை சரியாகத் தொடங்குகிறது என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையில் என் தங்கையின் சிறுநீரக கல், ஃபுட் பாய்சன் என்று சொல்லப்பட்டு, என் தாய் தந்தை இருவருக்கும் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு என ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் புரட்டிப் போடப்பட்டது எங்கள் இல்லம். சில நேரங்களில் அடுத்து எப்படி நகரும் என்று வேதனையோடு நாங்கள் நகர்ந்து கொண்டிருந்த காலங்கள் உண்டு.  பின்னால் அத்தகைய சூழ்நிலையிலிருந்து எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்துக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்த நெருங்கிய உறவினர்களின் இழப்பு செய்திகளும், அவர்களின் இழப்பு தந்த வலியும் மீண்டும் சூழ்நிலையை அசாதாரணமாக மாற்றியது.  

ஒருவழியாக 2020 நிறைவு செய்துவிட்டு மிகுந்த நம்பிக்கையோடு ஆவலோடும் 2021 எதிர்நோக்கி இருந்தோம். பிறந்திருக்கிற இந்த புத்தாண்டு நிச்சயம் அமைதி, சந்தோஷம், சமாதானம் போன்ற நல்விஷயங்களை தரும் என்ற எதிர்பார்ப்போடு இந்த ஆண்டு தொடங்கி ஒரு மூன்று மாதம் ஓரளவிற்கு நன்றாகத்தான் சென்றுக்கொண்டிருந்தது.  அப்போதுதான் நாம் யாருமே எதிர்பார்க்காத இந்த இரண்டாம் அலை! ஏப்ரல் மாதம் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என ஒரு வித்தியாசமான சூழ்நிலைக்கு நாம் சென்றது நாம் அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் தான் எனது மிக நெருங்கிய நண்பன் ராஜேஷ் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, சென்றுவிட்டார் என்று நினைத்த அந்த வேண்டாத விருந்தாளி இன்னும் செல்லவில்லை என உணர்த்த  என் நண்பன் உடம்பில் குடிக்கொண்டார்.  நாங்கள் மிக நம்பிக்கையோடும் நேர்மறையான எண்ணங்களோடும் அவர் திரும்பி வந்துவிடுவார் என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தோம்.  அப்போது தான் கொரோனாவில்  இருந்து குணமான அவருக்குக் கருப்புப் பூஞ்சை  என்ற அடுத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. இந்த கருப்பு பூஞ்சைக்குப் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சுய நினைவை இழந்து கோமா ஸ்டேஜ் என்று சொல்லப்படுகிற கொடுமைக்கு உள்ளானார்.  இந்த சூழ்நிலையில் 20 நாட்களுக்கு மேலாகக் கோயம்புத்தூரில் ஒரு பிரபலத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் ஜூன் மாதம் 2ஆம் தேதி நினைவுகளை மட்டும் எங்களிடம் விட்டுவிட்டு விலகிவிட்டார்.  இன்னும் கூட அந்த வேண்டிய நண்பனை இழந்த அந்த வலி என்னை விட்டு அகலவில்லை. 

இதோ, ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக நாம் அனுசரித்துக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நண்பர்கள் தினத்திற்கும்  கடந்த ஆண்டுவரை போட்டிப் போட்டுக்கொண்டு யார் முதலில் வாழ்த்துக்களைச் சொல்வது என மாறி மாறி முதல் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வோம். இதோ, இன்றைக்கும் இந்த நண்பர்கள் தினத்தில் வேண்டிய என் நண்பனுக்குத் தான் என்றும் என் முதல் வாழ்த்து! அவர் இறந்துவிட்டார் அல்லது அவர் இல்லை என்ற அந்த சூழ்நிலையை இன்னும் கூட என் இருதயம் ஏற்க மறுக்கிறது. அதன் பிறகு இந்த நினைவிலிருந்து மீண்டுவர கிளப் ஹவுஸ் என்று சொல்லப்படுகிற சமூகவலைத்தளத்தில் சிக்கியதும் அடுத்தடுத்து அவன் நினைவுகளை மறக்க மேற்கொண்ட முயற்சிகளால் தூக்கம் தொலைந்ததே  தவிரத் துக்கம் குறையவில்லை.  சென்ற வருடம் பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்தபோது என் நண்பன் ராஜேஷிற்கு மிகுந்த வருத்தம், அவர் போயும் போயும் கொரோனாவிலா  இறக்க வேண்டும்? என்று திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டே இருந்தார்.  அப்படிப்பட்ட கரிசனை உள்ள அவனைத்தான் அதே கொரோனா கொண்டு சென்றது என்று நினைக்கும்போது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு வேதனையாக இருக்கிறது.  

ஏன் இந்த வேண்டாத விருந்தாளி நம் உலகத்திற்குள், நம் தேசத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்? ஏன் நம் வேண்டியவர்கள் அனைவரையும் கொண்டு செல்ல வேண்டும்? கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து ஏதாவது ஒரு அசம்பாவிதங்களும், இழப்பு செய்திகளும், எதிர்மறை செய்திகளும், பயமுறுத்தக் கூடிய செய்திகளையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தோம். நாம் எதிர்ப்பாராத விதத்தில் பலரை இழந்திருக்கிறோம் என்ற நிஜத்தைத் தான் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும்போது அந்த வேண்டாத விருந்தாளியையும்  அதனால் நான் இழந்த  என் வேண்டிய நண்பனையும் நினைக்கும்போது, என்று தீரும் இந்த சோகம் என்ற வேண்டுதல்கள் தான் இறைவனை நோக்கிக் கேட்க வேண்டியதாயிருக்கிறது.  நம் அனைவரின் வேண்டுதல்களும் இந்த வேண்டாத விருந்தாளியை இறைவன் சீக்கிரத்தில் வெளியேற்ற வேண்டும், வேண்டியவர்கள் நம்மிடையே நீண்ட ஆயுளோடும் சுகத்தோடும் இருக்கவேண்டும் என்பதே! இதோ மூன்றாம் அலை வேறு வருகிறதாம், நினைக்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஒருவேளை இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் அல்லது  இயற்கை மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் இந்த மூன்றாம் அலை முறியடிக்கப்பட வேண்டிக்கொள்ளுங்கள்.  இனியாவது வேண்டியவர்களுடன் சந்தோஷமாய் கழிப்போம்! உங்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.  அடுத்தடுத்து வரக்கூடிய காலங்களில் வேறு நல்ல பதிவுகளில் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி.
***

இப்படைப்பின்  நோக்கம் வலிகளை கடத்துவதல்ல,  உணர்வுகளைப் பதிவு செய்வதே! நன்றி.

12 comments:

  1. உண்மையிலேயே மிக அழகான மற்றும் உணர்வுபூர்வமான பதிவு. இந்த பதிவை எங்களுக்கு தந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் சார்.

    ReplyDelete
  2. காலம் மனப்புண்களை ஆற்றட்டும்.  இறைவனின் துணையோடு சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைப்போம்.  பாதுகாப்பாக இருப்போம்.

    ReplyDelete
  3. இதுவும் கடந்து போகும் என்று சுலபமாகச் சொல்லி விடுகிறார்கள். கடப்பது தான் கடினமாக இருக்கிறது.

    சோதனைகள் தீரட்டும். வெற்றி கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் சார். வருகைக்கும் கறுத்துக்களுக்கும் மிகுந்த நண்றிகள்.

      Delete
  4. ஆம். பலரை இழந்திருக்கிறோம்.
    நீயும் உன் குடும்பமும் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி.
    தொடர்ந்து பதிவுகளை எழுது.

    ReplyDelete
  5. வேண்டிய விருந்தாளிகள் வந்தாலே எப்போது செல்வார்கள் என்று எதிர்பார்க்கும் இந்த காலத்தில், வேண்டாமல் வந்த இந்த கொரோனா விருந்தாளியயை வேண்டியே🙏🏻 துரத்துவோம்.. உங்களுக்கு ஏற்ப்பட்ட அனைத்து இன்னல்களில் இருந்து வெளிவர நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்... நீங்கள் தொடர்ந்து Blog எழுத என்னுடைய வாழ்த்துகள் சகோதரனே 👍🏻👍..

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி சகோதரி வருகைக்கும் வேண்டுதல்களுக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்.

    ReplyDelete
  7. நிச்சயமாக 👍🏻👍🏻

    ReplyDelete
  8. ஓ ஃபெர்னாண்டோ என்ன இது ஒரு சோதனை! கொஞ்சம் உங்கள் தங்கை பற்றி அறிந்தேன். உங்கள் பதிவு இல்லையே என்று மகேஷிடம் கேட்ட போது அறிந்தேன். இதுவும் கடந்து போகும் என்று சொல்வது நம் ஆறுதலுக்காக நம்பிக்கை அளிப்பதற்காகச் சொல்லப்பட்டாலும் அத்தனை எளிதல்ல அந்தைக் கடந்து வருவது என்பது.

    வாசிக்கவே ரொம்ப வேதனையாக இருந்தது.

    எப்படியோ கடந்து வந்து உங்கள் நண்பரை இழந்த துக்கத்திலிருந்தும் மீண்டு வந்திட பிரார்த்தனைகள். கஷ்டகாலம் கடந்து நல்லது நடக்கட்டும் ஃபெர்னாண்டோ!

    கீதா

    ReplyDelete